ADDED : பிப் 22, 2025 06:23 AM
கலசப்பாக்கம் : பள்ளி வளாகத்தில் விளையாடிய போது தவறி விழுந்ததில் காயமடைந்த மாணவி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்து, கடலாடி மதுரா மாம்பாக்கம் யூனியன் தொடக்கப் பள்ளியில் 42 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்; இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த 13ம் தேதி ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றதால், ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார்.
அப்போது, கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகள் ரக்சிதா, 7, என்ற ஒன்றாம் வகுப்பு மாணவி, காலையில் பள்ளி வளாகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, மாணவியருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது தவறி விழுந்ததில் காயமடைந்து, கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
பின், 17ம் தேதி பள்ளி வந்த நிலையில், திடீரென வாந்தி, மயக்கம், வலிப்பு ஏற்பட்டது. மீண்டும் கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, மேல் கிசிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, நேற்று முன்தினம் இரவு இறந்தார். கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.