குழந்தைகளுக்கு தடுப்பூசி மாவட்டங்களுக்கு மதிப்பெண்
குழந்தைகளுக்கு தடுப்பூசி மாவட்டங்களுக்கு மதிப்பெண்
ADDED : ஏப் 04, 2024 08:23 PM
சென்னை:குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, தவணை தவறாமல் முறையாக செலுத்துவதை உறுதி செய்யும் வகையில், மதிப்பீடு மதிப்பெண் வழங்க பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையில், 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு, 11,000 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், முதல் தவணைக்கு பின், அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, 100 சதவீத தடுப்பூசி இலக்கு எட்டப்படுவதில்லை.
எனவே, தடுப்பூசி போடுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதார மாவட்டங்களில், 90 முதல் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டால், 5 மதிப்பெண் வழங்கப்படும். 95 சதவீதத்துக்கு மேல் செயல்படும் விகிதம் இருந்தால், 10 மதிப்பெண் அளிக்கப்படும்.
ஒருவேளை, 90 சதவீதத்துக்கு குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், அம்மாவட்டத்திற்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்படும். எந்த மாவட்டம் தடுப்பூசியில் பின்தங்கியுள்ளது என்பதை கண்டறிந்து, சரி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
