சூறாவளியால் தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு தடை
சூறாவளியால் தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு தடை
ADDED : மே 24, 2024 03:58 AM

ராமேஸ்வரம் : சூறாவளி வீசியதால் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசக் கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் நேற்று தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.
தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் இறக்கும் பாலம் மீது அலைகள் மோதி 10 அடி உயரத்திற்கு மேலே எழுந்தது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுக்க போலீசார் தடை விதித்து தடுப்பு வேலிகள் அமைத்தனர். மேலும் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு சுற்றுலா படகு சவாரியை வனத்துறையினர் ரத்து செய்தனர்.
சூறாவளியால் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறை தடை விதித்தது. இதனால் 300 படகுகளை கரையில் நிறுத்தி வைத்து மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.