ADDED : ஏப் 01, 2024 04:20 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம், தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னார் வளைகுடா கடலில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வழக்கத்தை விட நீர் மட்டம் அதிகரித்தது.
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடல் நீர் தேங்கியதால் மீனவர்கள் குடிசைகள், ஹோட்டல், சங்கு கடைகளை கடல்நீர் சூழ்ந்தது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் எழுந்த ராட்சத அலைகளால் தேசிய நெடுஞ்சாலையை கடல் நீர் கடந்து சென்றதில் 2 கி.மீ., சாலையில் சிறிய கற்கள் பரவியுள்ளன. சுற்றுலா பயணியரை, உடனே வெளியேறி செல்லுமாறு மீனவர்கள் எச்சரித்தனர். பீதியடைந்தவர்கள் காரில் ராமேஸ்வரம் சென்றனர்.
கடலில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாறுபாடா அல்லது வேறு காரணமா என, மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலை நீடித்தால் தனுஷ்கோடி சாலை அரிக்கப்பட்டு, சேதமடையும் அபாயம் உள்ளது. மே முதல் செப்டம்பர் வரை வீசும் தென்மேற்கு பருவக்காற்று சீசனில், மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, தனுஷ்கோடியில் ராட்சத அலைகள் எழுவது வழக்கம்.
ஆனால், வழக்கத்தை விட முன்கூட்டியே கடல் நீர் ஊருக்குள் புகுந்தது அதிர்ச்சியாக உள்ளது என, தனுஷ்கோடி மீனவர் உமயவேல் தெரிவித்தார்.

