செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை
ADDED : மார் 07, 2025 12:46 AM

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2023-ல் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் மின் துறை அமைச்சரானார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில், அமலாக்கத் துறையினர் நேற்று காலை 8:00 மணி முதல், மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கரூர் பழனியப்பா நகரில் அமைந்துள்ள ஆல்பின் டவர்ஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டில் சோதனை செய்தனர்.
தொடர்ந்து, கரூர் ராயனுாரில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வீடு, ஆத்துார் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி வீடு போன்றவற்றில் சோதனை நடத்தினர்.
ஐந்து கார்களில், மூன்று குழுக்களாக வந்த, 20 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனை, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை, இரவு 10:00 மணியை தாண்டியும் தொடர்ந்தது.
மாயனுாரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் தந்தை சுந்தர் வீட்டுக்கு சோதனையிட, நேற்று காலை 6:30 மணிக்கு அமலாக்கத் துறையினர் வந்தனர். மதியம் 3:00 மணி வரை யாரும் வரவில்லை. மாலை 6:30 மணி வரை காத்திருந்த அதிகாரிகள், யாரும் வீட்டுக்கு வராததால் திரும்பிச் சென்றனர்.