விஜயலட்சுமியின் பாலியல் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு
விஜயலட்சுமியின் பாலியல் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு
UPDATED : பிப் 27, 2025 10:34 PM
ADDED : பிப் 27, 2025 07:09 PM
புதுடில்லி:நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னுடன் பாலியல் உறவு வைத்து, பிறகு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்; இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான மனுவை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், சீமான் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என கருத்து கூறியிருந்தது. மேலும், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கில், தங்கள் தரப்பு வைத்த வாதங்களை உயர் நீதிமன்றம் சரியாக கேட்கவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதோடு, 12 வாரத்திற்குள் தனக்கு எதிரான வழக்கை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என, அந்த மனுவில் சீமான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அழைப்பாணை எத்தனை முறை கொடுப்பர்?
ஓசூரில் சீமான் அளித்த பேட்டி:
அண்ணா
பல்கலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், அரசு ஏன் இவ்வளவு
தீவிரம் காட்டவில்லை. விஜயலட்சுமி என் மீது கொடுத்த புகார் தொடர்பாக,
ஏற்கனவே ஒரு அழைப்பாணை கொடுத்தார்கள். எத்தனை முறை கொடுப்பார்கள்?
என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அதனால், நான் வெளிநாட்டுக்குப் போக முடியாது. இருந்தும், அசிங்கப்படுத்துகின்றனர்.
போலீஸ் விசாரணைக்கு வருகிறேன் என கூறி விட்டேன். அப்படி இருக்க, என்
வீட்டுக்கு சென்று ஏன் நோட்டீஸ் ஒட்ட வேண்டும். அது சேட்டை தானே. நீங்கள்
நோட்டீஸ் ஒட்டி சென்ற பின், என் வீட்டில் வேலை செய்யும் ஒரு தம்பி, அதை
கிழித்துள்ளார்.
நாளைக்கே வந்தாகணும் என்றால் வர முடியாது. உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்?
தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, என் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு
விசாரணைக்கு வரும். ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் இருந்த போது
இப்படியெல்லாம் நடக்காது. தேர்தல் வரும் போதெல்லாம் இப்படிப்பட்ட
நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

