வருண்குமாருக்கு மன்னிப்பு கடிதம் மாநில நிர்வாகியை நீக்கினார் சீமான்
வருண்குமாருக்கு மன்னிப்பு கடிதம் மாநில நிர்வாகியை நீக்கினார் சீமான்
ADDED : ஆக 21, 2024 07:20 PM
சென்னை:திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு தன்னிச்சையாக விளக்கம் கடிதம் அனுப்பியதால், நாம் தமிழர் கட்சியின் மாநிலச்செயலர் சேவியர் பெலிக்ஸ், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறாக, பாடல் பாடிய குற்றச்சாட்டில், நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதுக்கு திருச்சி எஸ்.பி., வருண்குமார் தான் காரணம் என்றும், நாடார், யாதவர், தேவேந்திரகுல வேளாளர் போன்ற சமுதாயத்தினரை வருண்குமாருக்கு பிடிக்காது என்பதால், ஜாதிய நோக்கத்துடன் செயல்படுகிறார் என்றும் சீமான் விமர்சித்தார்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் வருண்குமார் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதுாறு பரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருண்குமார், தனக்கு எதிராக அவதுாறு பரப்பியதற்காக, ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்; 2 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நோட்டீசுக்கு, சீமான் அனுமதி பெறாமல், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை மாநிலச்செயலர் சேவியர் பெலிக்ஸ் தன்னிச்சையாக, 16 பக்கத்திற்கு விளக்க கடிதம் ஒன்றை வருண் குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில், 'வருண்குமாராகிய உங்கள் ஜாதி என்ன என்பது எனக்கு தெரியாது. இளம் அதிகாரியான நீங்கள் டி.ஜி.பி.,யாகும் தகுதி இருக்கிறது. உங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதுாறு கருத்திற்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
மேலும், சீமான் மன்னிப்பு கோரும் விதமாக, அந்த விளக்க கடிதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சீமான், தன் அனுமதி பெறாமல் செயல்பட்ட சேவியர் பெலிக்சை, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
***