ADDED : ஜூலை 02, 2024 03:29 AM

சென்னை : சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட மற்றும் மணிப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து இலங்கைக்கு மர்ம நபர்கள், மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருளை கடத்த முயற்சி செய்வதாக, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையிலான தனிப்படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது ரியாசுதீன், 27, என்பவர், சென்னையில் பைனான்சியர் போல, ஹவாலா பண பரிமாற்ற கும்பல் தலைவனாக செயல்பட்டு வருகிறார்.
அவர், போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாயுடன், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள பெண் ஒருவரை சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.
இதையடுத்து, முகமது ரியாசுதீன் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். ஜூன், 11ல், போதை பொருள் கடத்தல் தொடர்பாக, இலங்கையைச் சேர்ந்த சிறுவன் உட்பட இரண்டு பேர், சென்னையில் பிடிபட்டனர். அவர்களை, முகமது ரீயாசுதீன் போதை பொருள்
தொடர்ச்சி 3ம் பக்கம்
கடத்தலுக்கு கேடயமாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், முகமது ரியாசுதீன், மண்படம் முகாமில் கிருஷ்ணகுமாரி, 55, என்பவரை சந்தித்து, 1.45 கோடி ரூபாய், அமெரிக்க டாலர் மற்றும் இலங்கை நாட்டு பணத்தை ஒப்படைத்த போது, இருவரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.47 கிலோ 'மெத்தாம்பேட்டமைன்' போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் கிருஷ்ணகுமாரிக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்குமாரி வசமிருந்த போதை பொருள், சென்னை செங்குன்றத்தில் இருந்து மண்டபம் முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, படகு வாயிலாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இதன் பின்னணியில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இலங்கையை சேர்ந்த காசிலிங்கம், 60 என்ற கைதி உள்ளார். அவரை, போதை பொருள் கடத்தல் வழக்கில், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், 2021ல் கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது தெரியவந்தது. அவரது மனைவி தான் கிருஷ்ணகுமாரி.
சிறையில் இருக்கும் கைதிகள், ரத்த சம்பந்தமான உறவினர்களிடம், 'வாட்ஸாப்' வீடியோ அழைப்பில் பேசலாம் என்பதால், அந்த வசதியை பயன்படுத்தி, மனைவி வாயிலாக காசிலிங்கம் மெத்தாம்பேட்டமைன் போதை பொருள் கடத்த முயன்றது தெரியவந்தது.
மற்றொரு கடத்தல்
அதேபோல, மணிப்பூர் மாநிலத்தில் இருந்து, காரில் சென்னைக்கு போதை பொருள் கடத்தப்படுவதும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலை வழியாக சென்ற கார் ஒன்றை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். அதில், 2.7 கிலோ மெத்தம்பேட்டமைன் சிக்கியது. இதுதொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் இலங்கைக்கு மெத்தாம் பேட்டமைன் கடத்த இருந்தது தெரியவந்தது.
இரண்டு கடத்தல் சம்பவங்களிலும், 40 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4.17 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; மொத்தம் ஒன்பறு பேர் கைதாகி உள்ளனர்.