தாய்ப்பால் விற்பனையா? புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
தாய்ப்பால் விற்பனையா? புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
ADDED : ஜூன் 01, 2024 08:48 PM
சென்னை:'தமிழகத்தில் தாய்ப்பால் விற்பனை குறித்து, 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்' என, உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாதவரம் பகுதியில், சட்ட விரோதமாக தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த, மருந்து விற்பனை கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், 'சீல்' வைத்தனர்.
விசாரணையில், 'புரோட்டீன் பவுடர்' விற்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை வைத்து, தாய்ப்பாலை சிறிய புட்டிகளில் அடைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுதும் சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிதறா என்பதை கண்காணிக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், மருந்தகங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தால், அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்தியாவில் தாய்ப்பால் தானமாக அளிக்கவோ, பெறவோ மட்டுமே அனுமதி உண்டு. வணிக ரீதியாக தாய்ப்பாலை பயன்படுத்தக் கூடாது.
தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வோர் குறித்து பொது மக்கள், 94440 42322 என்ற மொபைல் போன் எண்ணில் புகார் அளிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க, 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மக்கள், 94448 11717 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.