செந்தில் பாலாஜி வழக்கு ஆக., 2ல் குற்றச்சாட்டு பதிவு
செந்தில் பாலாஜி வழக்கு ஆக., 2ல் குற்றச்சாட்டு பதிவு
ADDED : ஜூலை 30, 2024 11:20 PM
சென்னை:அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக ஆக., 2ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில், 'அமலாக்கத் துறை வழக்கில் விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்' என, செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.அல்லி, ஆக., 2ம் தேதி குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

