ஜெனரிக் மருந்து, சிறுதானியங்களுக்கு விரைவில் தனி விற்பனையகங்கள்
ஜெனரிக் மருந்து, சிறுதானியங்களுக்கு விரைவில் தனி விற்பனையகங்கள்
ADDED : ஆக 16, 2024 02:23 AM
சென்னை:சாமை, தினை, வரகு, தேன், காய்கறி, மஞ்சள், மசாலா உட்பட மலைவாழ் மக்களுக்கான சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும், 'ஜெனரிக்' மருந்துகளை, அனைத்து மக்களிடமும் சேர்க்க, தனி விற்பனையகங்கள் அமைக்கும் பணியில், கூட்டுறவு துறை ஈடுபட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஈரோடு, சத்தியமங்கலம் பெரும் பலநோக்கு சங்கம், 'முல்லை' என்ற வர்த்தக பெயரில் தேன் விற்கிறது. கொல்லிமலை பலநோக்கு சங்கம், 'ஓரிலேண்ட்' வர்த்தக பெயரில் காபி பவுடர், கள்ளக்குறிச்சி சங்கம், 'வெள்ளிமலை' பெயரில் வரகு மற்றும், 'கிளாக்காடு' பெயரில் புளி விற்கிறது. இதேபோல பல சங்கங்கள் சாமை, தினை உள்ளிட்ட சிறுதானிய வகைகளையும், மஞ்சள், மசாலா பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளையும் விற்கின்றன. இவை அனைத்தையும், ஒரே இடத்தில் விற்கும் வகையில், தனி விற்பனையகம் துவக்கும் பணியில், கூட்டுறவு துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களின் பல்பொருள் அங்காடிகளில், பல்வேறு நிறுவனங்களின் பொருட்களுடன், கூட்டுறவு தயாரிப்புகளும் விற்கப்படுகின்றன. அவை அதிகம் பேரை சென்றடையவில்லை. எனவே, கூட்டுறவு தயாரிப்புகளை மட்டும் விற்க, தனி விற்பனையகம் துவக்கப்பட உள்ளது. அங்கு குறைந்த விலையில், ஜெனரிக் மருந்துகள், காய்கறிகள் விற்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. விரைவில் சென்னையில், 20 உட்பட மாநிலம் முழுதும் கூட்டுறவு தயாரிப்புக்கான தனி விற்பனையகங்கள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

