ADDED : செப் 14, 2024 11:49 PM
சென்னை: தமிழகம் முழுதும் நேற்று நடந்த, 'லோக் அதாலத்'தில், 683 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும், 475 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், கே.ஞானபிரகாசம், ஏ.ராமமூர்த்தி, எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ், எஸ்.விமலா ஆகியோர் தலைமையில் ஆறு அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.ராமலிங்கம், ஜி.சொக்கலிங்கம், எஸ்.ஆனந்தி ஆகியோர் தலைமையில், மூன்று அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.
விபத்து வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், நில ஆர்ஜிதம், திருமண விவகாரம் உள்ளிட்ட வழக்குகள், லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன. மாவட்ட, தாலுகா அளவில் நடந்த லோக் அலாத்தில், 69,033 வழக்குகளில், 660.26 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில், 179 வழக்குகளில், 22.86 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்பட்டது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலரான நீதிபதி நஷீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரான நீதிபதி கே.சுதா ஆகியோர், இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.