நடிகையருக்கு பாலியல் தொல்லை; 'தமிழகத்திலும் அதுதான் நடக்கிறது'
நடிகையருக்கு பாலியல் தொல்லை; 'தமிழகத்திலும் அதுதான் நடக்கிறது'
ADDED : ஆக 21, 2024 09:10 AM

சென்னை : தமிழ் திரையுலகிலும், நடிகையருக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக, நடிகை சனம் ஷெட்டி கூறினார்.
அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
உலகம் முழுதும் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது. ஆண்கள் மற்றும் சிறார்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். மேற்கு வங்கத்தில், பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுஉள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம் பெண்ணும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவியரும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அந்த வகையில், நவீன நங்கையர் பவுண்டேஷன் என்ற அமைப்பு வாயிலாக, வரும் 24ல், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, இரவு 7:00 - 9:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன.
சமரசம் செய்து கொள்ளும் நடிகையருக்கு மட்டுமே, படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது குறித்து, நீதிபதி ேஹமா கமிட்டி அம்பலப்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா உலகிலும் நடிகையருக்கு பாலியல் தொல்லை தரப்படுகிறது. எல்லாரும் அப்படி நடந்து கொள்வதாக சொல்ல முடியாது.
அதிகார திமிர் பிடித்தவர்கள், அத்தகையை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனக்கும் தொல்லை தர முயற்சி செய்துள்ளனர். அவர்களுக்கு அந்த வினாடியே தக்க பாடம் புகட்டி உள்ளேன்.
இவ்வாறு கூறினர்.

