ADDED : மார் 02, 2025 01:16 AM
சென்னை: தொழிற்பேட்டையில் அனைத்து பராமரிப்பு பணிகளையும், 'சிட்கோ' மேற்கொள்வதால், உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்து வரியில், 50 சதவீதம் சிட்கோவுக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆலைகளை துவக்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன், தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும், சிறு தொழில் வளர்ச்சி கழகம், தொழிற்பேட்டைகளை அமைத்து வருகிறது.
இது, மாநிலம் முழுதும், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது. அவற்றில், பல நுாறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்நிறுவனங்களிடம் இருந்து, உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கின்றன.
இதுகுறித்து, சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
தொழிற்பேட்டைகளில் குடிநீர் வினியோகம், தெரு விளக்கு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை, சிட்கோ மேற்கொள்கிறது. சாலை அமைப்பது, குப்பை சேகரிப்பு போன்ற பணிகளை, உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டும். அவை, எந்தவித பணிகளையும் செய்வதில்லை.
ஆனால், சொத்து வரியை மட்டும் குறித்த காலத்திற்குள் வசூலிக்கின்றன. தொழிற்பேட்டைகளை பராமரிக்க, சிட்கோவுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்து வரியில் இருந்து, 50 சதவீதத்தை சிட்கோவுக்கு வழங்க வேண்டும். இப்படி செய்தால், அதன் நிதிச்சுமையும் குறையும். மேலும், பராமரிப்பு பணிகளும் துரிதகதியில் முறையாக மேற்கொள்ளப்பட்டு, தொழிற்பேட்டைகள் சிறப்பான முறையில் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.