சேலத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு தாமத வினியோகத்தால் நுகர்வோர் பாதிப்பு
சேலத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு தாமத வினியோகத்தால் நுகர்வோர் பாதிப்பு
ADDED : ஏப் 23, 2024 08:42 PM
சேலம்:ஆவின் பால் கொள்முதல் குறைந்ததால், சேலத்தில் நேற்று பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் காலதாமதமாக பால் விநியோகிக்கப்பட்டதால் நுகர்வோர் அவதிக்குள்ளாகினர்.
சேலம் ஆவின் பால் கொள்முதல் தினசரி, 5 லட்சம் லிட்டராக இருந்து, 4.70 லட்சம் லிட்டராக குறைந்த நிலையில், தற்போது, 4.68 லட்சம் லிட்டருக்கும் கீழ் குறைந்துள்ளது. உற்பத்தியாளர் சங்கத்தில் சேகரிக்கப்படும் பால், அதன் அருகே உள்ள தலா, 5,000 கொள்ளளவு கொண்ட, 74 பி.எம்.சி., சென்டர்களில் பதப்படுத்தி அங்கிருந்து, 14 தடங்களில் சென்னைக்கு தினமும், 2.30 லட்சம் லிட்டர் அனுப்பப்படுகிறது. இதற்கு முன் அதிகபட்சம் சென்னைக்கு, 2.50 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளூர் தேவைக்கு, 2.26 லட்சம் லிட்டர் பால், கால், அரை, ஒரு லிட்டர் அளவில் தனித்தனியே பேக்கிங் செய்து, அவை முகவர் மூலம் நேரடியாக நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. பால் தட்டுப்பாட்டை போக்க, தனியாரிடம் கொள்முதல் செய்து சமாளிக்கப்படுகிறது.
மேலும், பேக்கிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டு, சில்லரை வினியோகத்தில், 2 மணி நேரம் தாமதமானதால், முகவர்கள், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆவின நிர்வாகம், காலை, 4:30க்கு வழங்கிய வேண்டிய பாலை காலை, 6:15 மணிக்கு வழங்குவதால், காத்திருக்கும் நுகர்வோரும் சிரமப்படுகின்றனர். அதேபோல் மாலை நேரத்திலும் தாமதமாகவே, பால் வினியோகம் நடப்பதாக, முகவர்கள் தெரிவித்தனர். அதனால் ஆவின் பாலை மட்டும் நம்பியுள்ள டீ கடை, ஓட்டல், காபி பார் போன்றவைக்கும் உரிய நேரத்தில் பால் வினியோகிக்க முடியாததால் அவர்களும் தனியார் பாலுக்கு மாறும் நிலை உருவாகிவிட்டது.
மேலும், பால் உப பொருளான மோர், 1,500 லிட்டர் விற்பனையில் இருந்து, 1,400 லிட்டராக குறைந்துள்ளது. அதேபோல், 10,000 லிட்டர் தயிர், 8,500 லிட்டருக்கும் குறைவாகி விட்டது. அத்துடன் வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட ஆவின் பொருட்களின் உற்பத்தியும் குறைந்துள்ளது. நேற்று காலை தயிர் விநியோகம் முற்றிலும் நிறுத்ப்பட்டதாக நுகர்வோர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் ஆவின் பொது மேலாளர் குமரேஸ்வரன் கூறுகையில், ''தனியாரிடம் பால் கொள்முதல் செய்து தட்டுப்பாடின்றி நிலைமையை சமாளித்து வருகிறோம்,'' என்றார்.

