கரும்பனிச்சை அம்மையே குரங்கம்மை வரும்முன் காக்க சித்தா டாக்டர் ஜெயவெங்கடேஷ் 'டிப்ஸ்'
கரும்பனிச்சை அம்மையே குரங்கம்மை வரும்முன் காக்க சித்தா டாக்டர் ஜெயவெங்கடேஷ் 'டிப்ஸ்'
ADDED : ஆக 25, 2024 02:16 AM

மதுரை:''கரும்பனிச்சை அம்மையின் தாக்குதலை ப் போலவே, குரங்கம்மை நோயின் தாக்குதலும் உள்ளதால் வரும் முன் காப்போம் முறையில் குரங்கம்மை வராமல் தவிர்க்கலாம்,'' என்கிறார் மதுரை சித்தா டாக்டர் ஜெயவெங்கடேஷ்.
அவர் கூறியதாவது:
சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கரும்பனிச்சை என்ற அம்மை, 'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மையுடன் ஒத்துப் போகிறது. கருப்பு நிற தழும்புகளை விட்டுச் செல்லும்.
பெரும்பாலான அம்மை நோய்களில் கொப்புளங்கள் சீழ் பிடிக்காது. கொப்புளம் காய்ந்தவுடன் அம்மை இறங்கியதாகக் கருதி தலைக்கு தண்ணீர் விட்டு குளிக்க விடுவர்.
லேசான காய்ச்சல் இருக்கும். அம்மை இறங்கும் 9 அல்லது 11 நாட்கள் வரை குளிக்கக்கூடாது. குரங்கம்மையின் கொப்புளங்களில் சீழ் வைப்பதால் கிருமிகள் உருவாகும். அதனால் காய்ச்சல், குளிர் அதிகமாகிக் கொண்டே செல்லும்.
காப்பது எப்படி?
இந்த வைரஸ் கிருமியை தடுக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இளநீர், தயிர், மோர் குடித்தால் உடலில் குளிர்ச்சி அதிகரிக்கும்.
சூட்டை அதிகரிக்கும் மட்டன், சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கலாம். குரவை மீன், இறால் மீன் உணவுகள் குளிர்ச்சி தரும். நோய் தாக்கினால் இளநீர், மோர், குருணை அரிசிக்கஞ்சி, பாசிப்பயறு கஞ்சி போன்ற எளிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ் பருகுவது நல்லது. அம்மைக்கான மருந்துகளில் எலுமிச்சைக்கு தனியிடம் உண்டு. நீராகாரம், வெங்காயம், எலுமிச்சை, சாதம், மிளகு ரசம் சாப்பிடலாம். அம்மை கொப்புளங்கள் சீழ் பிடிப்பதால் நோய் தீவிரமாகிறது.
மஞ்சளுடன் முதிர்ந்த வேப்பமர இலையை சேர்த்து அரைத்து தடவினால் கொப்புளப் புண் சீக்கிரம் ஆறும். 13 நாட்கள் கழித்து குளிக்க விடலாம்.
தொற்று பரவல்
வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்தால் மற்றவர்களுக்கும் வரும். அலோபதி மருத்துவத்திலும் குணப்படுத்த 14 நாட்களாகும் என்கின்றனர்.
இது தலையில் ஆரம்பித்து முகம், வயிறு, மார்பு என பரவும். பெரும்பாலும் மனிதரிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்.
இது வைரஸ் கிருமி என்பதால் கொப்புள நீர் அவர்களது கை மற்றும் நகங்களிலோ அல்லது ஆடையிலோ படிந்திருந்தால் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். அவர்களை காற்றோட்டமான அறையில் தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.
விலங்குகள் வாயிலாகவும் பரவலாம் என்பதால் சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும். குரங்கம்மை என்பதால் குரங்கிடம் இருந்து மட்டும் பரவும் என நினைக்கக்கூடாது. வீட்டில் வளர்க்கும் கால்நடைகளால் பரவலாம் என்பதால் கவனம் தேவை.
இவ்வாறு கூறினார்.

