தொழில் பூங்கா தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி: 'சிப்காட்' நடவடிக்கை
தொழில் பூங்கா தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி: 'சிப்காட்' நடவடிக்கை
ADDED : பிப் 15, 2025 12:43 AM
சென்னை:ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், 'சிப்காட்' தொழில் பூங்காக்களில், ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெற, அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும், தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு, 20 மாவட்டங்களில், ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய 40 தொழில் பூங்காக்கள் உள்ளன.
அவற்றில் 8.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். சிப்காட் நிறுவனமும், தமிழக உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனமும் இணைந்து, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்பெற, தொழில் பூங்காக்களில் தங்கும் விடுதிகளை அமைத்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், 18,720 படுக்கைகள் உடைய தங்கும் விடுதி கட்டப்பட்டது. இது, 'பாக்ஸ்கான்' நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பயன்பாட்டில் உள்ளது.
பெண் பணியாளர்கள் பயன்பெற, செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தொழில் பூங்காவில், 807 படுக்கைகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தொழில் பூங்காவில், 1,495; காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டையில், 800; திருவண்ணாமலை செய்யாறில், 440; திருநெல்வேலி கங்கை கொண்டான் தொழில் பூங்காவில், 800 படுக்கைகளுடன் தங்கும் விடுதி கட்டும் பணிகள் துவங்கி உள்ளன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே நான்கு இடங்களில், தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன. புதிதாக ஓசூர், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தங்குமிடம் கட்டப்பட உள்ளது.
“பெண் பணியாளர்கள் அதிகம் உள்ள பூங்காக்களிலும் தங்குமிடம் கட்டப்படும்,” என்றார்.

