சிவகங்கை ரேஷன் கடையில் ரூ.2க்கு 50 மி.லி., மண்ணெண்ணெய்
சிவகங்கை ரேஷன் கடையில் ரூ.2க்கு 50 மி.லி., மண்ணெண்ணெய்
ADDED : மே 30, 2024 11:35 PM
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருக்கும், 30 லட்சம் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது; லிட்டர் விலை, 15 ரூபாய்.
இதற்கான மண்ணெண்ணெயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி, 2021ல் மாதம், 75.36 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டது; 2022 ஏப்., முதல் மாதம், 45 லிட்டராகவும்; 2023 ஏப்ரல் முதல், 27 லட்சம் லிட்டராகவும் குறைக்கப்பட்டது.
இதனால், கார்டுதாரர்களுக்கு தலா, 1 லிட்டரும்; சிலர் வாங்காதபட்சத்தில், 2 லிட்டரும் வழங்கப்பட்டது.
இந்தாண்டு ஏப்ரல் முதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, 10.84 லட்சம் லிட்டராக மேலும் குறைக்கப்பட்டது. இதனால், 30 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா 1 லிட்டர் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில், கொல்லங்குடியில் உள்ள ரேஷன் கடைக்கு, இம்மாதம், 38 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடை ஊழியர், 950 கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்பதால், ஒருவருக்கு, 2 ரூபாய்க்கு, 50 மி.லி., மண்ணெண்ணெய் வழங்கியுள்ளார். இது, கார்டுதாரர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டதால், 30 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா 1 லிட்டர் கூட வழங்க முடியவில்லை.
எனவே, முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில், அரை லிட்டர் - 1 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குமாறு ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கடைக்கு ஒதுக்கீடு செய்யும் போது, தங்களுடன் கார்டுதாரர்கள் தகராறு செய்யக்கூடாது என்பதற்காக, ஊழியர்களே, 50, 100 மி.லி., என தருகின்றனர்.
இந்த அளவு தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசிடம் கூடுதல் மண்ணெண்ணெய் கேட்கப்பட்டுள்ளது. கிடைத்ததும் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்ட வழங்கல் அதிகாரி கூறுகையில், 'அனைவருக்கும் சரிசமமாக வழங்க வேண்டும் என்பதற்காக, ரேஷன் ஊழியர், 50 மி.லி., மண்ணெண்ணெய் வழங்கியுள்ளார்' என்றார்.