'கோடநாடு சம்பவம் போல சிவராமன் மரணத்திலும் மர்மம்!'
'கோடநாடு சம்பவம் போல சிவராமன் மரணத்திலும் மர்மம்!'
ADDED : ஆக 24, 2024 11:08 PM
சென்னை:'பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலி என்.சி.சி., பயிற்சியாளர் மற்றும் அவரது மறைவு தொடர்பாக, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனியார் பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவராமனை போலீசார் கைது செய்தனர். அதற்கு முன், அவர் எலி மருந்து சாப்பிட்டதால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது, கட்டுக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.
அவரது தந்தை அசோக்குமார் கீழே விழுந்து இறந்ததாக செய்தி வந்துள்ளது. சில மணி நேர இடைவெளியில், தந்தையும், மகனும் இறந்தது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் தொடர்ச்சியாக நடந்த மர்ம மரணங்களை போலவே, இந்த வழக்கிலும் மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
பின்னணியில் உள்ளவர்களை தப்பிக்க வைக்க, இதுபோன்ற நாடகத்தை, தி.மு.க., அரசு அரங்கேற்றுகிறதோ என்ற எண்ணமும் பரவலாக எழுந்துஉள்ளது.
மக்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், முதல்வருக்கு உண்டு. மக்களின் சந்தேகங்களை போக்கி, உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

