மின் கட்டண விகிதத்தை மாற்றாததால் குறுந்தொழில் துறையினர் அதிருப்தி
மின் கட்டண விகிதத்தை மாற்றாததால் குறுந்தொழில் துறையினர் அதிருப்தி
ADDED : மார் 07, 2025 12:23 AM
சென்னை:மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், மின் கட்டண விகிதத்தை மாற்றி தராமல் இருப்பது, குறுந்தொழில் நிறுவனங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடிசை தொழில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, '3ஏ1' பிரிவில், 500 யூனிட் வரை, யூனிட்டுக்கு, 4.80 ரூபாயும்; அதற்கு மேல், 6.95 ரூபாயும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து, கிலோ வாட்டிற்கு மாதம், 75 ரூபாய் நிரந்தர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
'3பி' பிரிவில் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு, 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதனுடன் சேர்த்து, 50 கிலோ வாட் வரை உள்ள இணைப்புகளுக்கு கிலோ வாட்டுக்கு, 81 ரூபாயும்; 50 - 112 வரை, கிலோ வாட்டிற்கு, 160 ரூபாயும்; அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும், 589 ரூபாயும் நிரந்தர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2022 செப்டம்பரில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, ஆலைகளுக்கான நிலை கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.
இதை குறைக்கக் கோரி, சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன.
அந்நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, 12 கிலோ வாட் வரை மின் இணைப்பு பெற்றுள்ள தொழில்களுக்கு, '3பி' கட்டண விகிதத்தில் இருந்து, '3ஏ1' பிரிவுக்கு மாற்ற, 2023 நவம்பரில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதுவரை பல நிறுவனங்களுக்கு விகிதம் மாற்றப்படவில்லை.
இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:
மின் கட்டண விகிதம் மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்தால் மாற்றி தருவதாக, மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
விண்ணப்பம் செய்தாலும் மாற்றி தருவதில்லை. குறுந்தொழில்களுக்கு கட்டண விகிதம் மாற்றம் என்பது, ஒரு மாவட்டத்தில் மட்டும் உள்ள பிரச்னை அல்ல.
இது, மாநிலம் முழுதும் உள்ளது. ஒவ்வொரு ஆலையும் எந்த கட்டண விகிதத்தில் உள்ளது என்ற விபரம், மின் வாரியத்திடம் உள்ளது.
எனவே, மின் வாரியமே, 12 கிலோ வாட்டிற்கு குறைவாக உள்ள நிறுவனங்களின் மின் கட்டண விகிதத்தை மாற்ற வேண்டும். எத்தனை நிறுவனங்களுக்கு கட்டண விகிதம் மாற்றப்பட்டது என்ற விபரத்தை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.