ADDED : ஆக 18, 2024 03:00 AM
நம் நாட்டில் பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்தாலும், அவற்றை சந்தைப்படுத்துவது கடினமானதாக உள்ளது. தற்போது சில 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணைக்கும் 'பி2பி' வர்த்தக தளமாக இயங்கி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் 'Pneucons'.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், இந்தியாவில் தொழில்துறை வர்த்தகத்தை இணைக்கும் ஒரு முக்கியமான 'ஸ்டார்ட் அப்'. இது இன்ஜினியரிங் துறைக்கான 'பி2பி' சந்தையாக செயல்படுகிறது. ஆன்லைன் சந்தையான இந்நிறுவனம் நேரடி விற்பனையை எளிதாக்குகிறது; வெளிப்படையான பரிவர்த்தனைகள், விரைவான செட்டில்மென்ட்களை உறுதி செய்கிறது.
எளிதாக வாங்கலாம்... விற்கலாம்
நியூமேடிக்ஸ், பேரிங்க்ஸ், வால்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகை தொழில்துறை பொருட்களை வாங்க, விற்க வழிவகை செய்கிறது. நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு சிறந்த தயாரிப்புகளை, நல்ல விலையில் கொண்டு வருவதில் இந்நிறுவனத்தினர் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் வினியோகம், வர்த்தகர்கள் செலுத்த வேண்டிய பணத்துக்கான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர். தரம் மற்றும் நம்பகத்தன்மையை மையமாகக் கொண்டு பன்முக விற்பனைச் சந்தையாகவும் திகழ்கிறது. சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களின் விற்பனையை கூட்ட மற்றும் வாங்குபவர்களுடன் தடையின்றி இணைக்க இது ஒரு நல்ல தளம்.
ஆண்டு சந்தா மாதிரியில் இயங்குகிறது. தேடுபொறி வாயிலாகவும் விற்பனையை கூட்ட உதவுகிறது.
42 நாடுகளில்...
கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க விரும்பும் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, இந்தியாவில் இருந்து உலகளாவிய தளத்தை உருவாக்குவதையும் இந்த 'ஸ்டார்ட் அப்' நோக்கமாகக் கொண்டுள்ளது. 7,000 வாங்குநர்கள், 70 விற்பனையாளர்கள் தற்போது இந்த தளத்தில் இருக்கின்றனர். மேலும் 42க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்திய ரயில்வே, இந்தியன் ஆயில், இஸ்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள்.
இவர்களது இணையதளம்: www.pneucons.com
விபரங்களுக்கு இ மெயில்: Sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 9820451259
இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -

