எஸ்.பி., கமிஷனர்கள் வாயிலாக போலீசாருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
எஸ்.பி., கமிஷனர்கள் வாயிலாக போலீசாருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
ADDED : மே 31, 2024 04:09 AM

சென்னை: காவலர்கள் - கண்டக்டர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரு துறை அதிகாரிகளும் ஆலோசித்து, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்கள் வாயிலாக, போலீசாருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2021ல், காவல் துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின் சில திட்டங்கள் குறித்து அறிவித்தார். அப்போது, 'காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்று தெரிவித்தார்.
அப்போது, உள்துறை செயலராக இருந்த பிரபாகர், முதல்வரின் அறிவிப்பை சுட்டிக்காட்டி, அதன்படி, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க வேண்டும் என, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்துடன், அப்போது டி.ஜி.பி.,யாக இருந்த சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர்கள், ஐ.ஜி.,க்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இவை அனைத்தும் ஏட்டளவிலேயே இருந்தன. ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிடப்படவில்லை; நிதியும் ஒதுக்கவில்லை. போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவலர் - இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதுபற்றி, போலீசாருக்கு அரசு தெரிவிக்கவில்லை. இதனால், முதல்வர் அறிவிப்பின்படி, அரசு பஸ்களில் போலீசார் பயணம் செய்து வந்தனர்.
கடந்த, 21ம் தேதி, நாகர்கோவிலில் இருந்து துாத்துக்குடிக்கு சீருடையில், அரசு பஸ்சில் பயணித்த காவலர் ஆறுமுக பாண்டிக்கும், கண்டக்டர் சகாயராஜுக்கும், டிக்கெட் எடுப்பதில் தகராறு முட்டிக்கொண்டது.
இதற்கான, 'வீடியோ' வெளியாகி, போக்குவரத்து, காவல் துறைக்கு பெரும் பனிப்போர் மூண்டது. ஒருவழியாக, காவலர், கண்டக்டரை கட்டிப்பிடி ஷோ நடத்த வைத்து, தற்காலிகமாக பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது அரசு.
தொடர் நடவடிக்கையாக, இரு துறை அதிகாரிகளும் நான்கு முறை ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.
அதில், மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்கள் வாயிலாக, காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, காவல் துறை சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டு வழங்குவது குறித்த பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத துவக்கத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியாகி கார்டு கொடுக்கும் பணி துவங்கும்' என்றனர்.