ADDED : செப் 10, 2024 10:32 PM
சென்னை:துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ள, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இலங்கைக்கு தப்பிய பயணியை தேடி வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, டி.ஆர்.ஐ., என்ற மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையத்தில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தீபக், 30 உள்ளிட்ட இருவர், 'டிராலி' வாயிலாக, கழிப்பறையை சுத்தம் செய்யும் பொருட்களை ஏற்றி, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்றனர்.
அவர்கள் மீது, டி.ஆர்.ஐ., அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், டிராலியில் உள்ள பொருட்களை சோதனை செய்தனர்.
அதில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.2 கிலோ தங்கப்பசை இருந்தது. தீபக் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, சென்னை வந்த இலங்கை பயணி ஒருவர், தங்கம் கடத்தி வருவது குறித்து தீபக்கிடம் தெரிவித்துள்ளார்.
மூன்று சிறிய பார்சல்களில் தங்கத்தை கடத்தி வந்து, விமான நிலைய கழிப்பறையின் தண்ணீர் தொட்டி அருகே வைத்து விட்டு மற்றொரு விமானத்தில் இலங்கை தப்பி விட்டார்.
அந்த பார்சல்களை, தீபக் உள்ளிட்ட இருவரும் வெளியே எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.