தி.மு.க., ஆட்சி வந்தாலே மணல் கடத்தல்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சி வந்தாலே மணல் கடத்தல்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 17, 2024 04:25 PM

சென்னை: திமுக ஆட்சி வந்தாலே மணல் கடத்தல், கனிம வளங்கள் கடத்தல் மற்றும் பொது சொத்துக்கள் களவாடப்படுவது வாடிக்கையான ஒன்று என அதிமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மணல் கடத்துபவர்கள் பற்றி துப்புக் கொடுப்பவர்களையும், மணல் கடத்தலை தடுக்கும் வருவாய் மற்றும் போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. திமுக ஆட்சி வந்தாலே மணல் கடத்தல், கிராவல் மண் போன்ற கனிம வளங்கள் கடத்தல், பொது சொத்துக்கள் களவாடப்படுவது வாடிக்கையான ஒன்று.
கைகட்டி வேடிக்கை
ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை ஆளும் கட்சி நிர்வாகி ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியது. தமிழகம் முழுவதும் இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதும், இந்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.
கண்டனம்
இதன் உச்சமாக இரு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை - இலுப்பூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதை தடுக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, இதுபோன்ற செய்திகளை மக்கள் வெளிச்சத்திற்கு வராதபடி தடுப்பதில் முனைப்பு காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.