ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு ஊழல்களை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்
ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு ஊழல்களை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்
ADDED : மே 05, 2024 12:10 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் சுரங்கத் துறை, மாநகராட்சி, மின்வாரியம், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளின் ஊழல்களை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
திருநெல்வேலி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், 35. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனை பின்புற சாலையில் உள்ள கிளப்பில் பேட்மின்டன் விளையாட, அதிகாலை 5:40 மணிக்கு காரில் சென்றார்.
பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர், அரங்க வாசலில் காரை மறித்து, பெர்டின் ராயனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தலை, முதுகு, இரண்டு கைகளில் ரத்தம் சொட்ட கிளப் உள்ளே காரை ஓட்டினார் ராயன்.
வெட்டிய நபர் உள்ளே வராமல் ஓடிவிட்டார். தலையில் பலத்த வெட்டு காயத்தால் நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில், அரசு மருத்துவமனையில் ராயன் சேர்க்கப்பட்டார். டீன் ரேவதி தலைமையில் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னணி என்ன?
பெர்டின் ராயனின் பூர்வீகம் துாத்துக்குடி மாவட்டத்தின் கடல்புரம். மீன்பிடி தொழில் செய்யும் பரதவர் அமைப்பின் மாநில நிர்வாகியாக உள்ளார். பட்டதாரியான இவர் பெங்களூரு சட்ட கல்லுாரி ஒன்றில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
திருநெல்வேலியில் கட்டுமான நிறுவனம் நடத்தியபடி, தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக நெல்லையில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை கண்டறிந்து அம்பலப்படுத்தி வந்தார். வழக்கு தொடர்ந்து குறைகளுக்கு நிவாரணம் தேடுவதிலும் ஆர்வம் காட்டினார்.
சாராள் தக்கர் கல்லுாரி அருகே செயல்பட்ட நான்கு மாடி தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்துவமனைக்கான எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுப்படி அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அது செயல்பட அனுமதி வழங்கிய உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சிக்கலில் உள்ளனர்.
முறையாக ஆய்வு செய்யாமல் கட்டடங்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பதும், அதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதும் தொடர்ந்து நடப்பதாக கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.
அந்த கட்டடங்களால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டதுடன் தவிர, போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் அவ்வாறு 122 பெரிய கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
நிதி இழப்பு
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் கருப்பு பணத்தால் பழைய கட்டடங்களை வாங்கி இடித்து, அரசு துறைகளில் எந்த அனுமதியும் பெறாமல் பெரிய பெரிய வணிக வளாகங்களை கட்டி, பெரும் லாபத்துடன் அவற்றை விற்று வந்த ஒரு கும்பல் குறித்து தகவல் சேகரித்து மாநகராட்சியில் புகார் அளித்தார்.
அவர் அளித்த தகவல்களால் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி நிர்வாகம், நுாற்றுக்கு மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேல் நடவடிக்கை குறித்தும் ராயன் துருவியதால், மேலும் இரண்டு தடவை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டது.
எனினும், நோட்டீசை தாண்டி மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தற்போது அந்த விஷயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் ரோடு போட மாநகராட்சியில் கான்ட்ராக்ட் எடுத்தது. கான்ட்ராக்ட் எடுப்பவர், தங்கள் நிறுவனம் பெயரில் லாரிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.
எதுவுமே சொந்தமாக இல்லாத அந்த நிறுவனம், அனைத்தும் இருப்பதாக போலியாக ஒரு பட்டியலை மாநகராட்சியிடம் கொடுத்தது. இந்த முறைகேடு குறித்து புகார் அளித்ததால், நிறுவனத்திற்கு அளித்த டெண்டரை மாநகராட்சி ரத்து செய்ய நேர்ந்தது.
மாநகராட்சியை ஏமாற்ற முயற்சித்த நிறுவனத்தின் மீது நடவடிக்கையும் எடுக்குமாறு கமிஷனர் தாக்கரே உத்தரவிட்டார்.
அதன்படி, அதிகாரிகள் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நேற்று ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் நடக்க இருந்தது. அதில் பெர்டின் ராயன் சாட்சியம் அளிக்க இருந்தார்.
கல்குவாரிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் அடை மிதிப்பான்குளம் கல் குவாரியில் விபத்து நடந்து, இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் பலியாகினர்.
மாநில அளவில் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்தனர். அதன் அடிப்படையில் 50 குவாரிகளுக்கு அப்போதைய கலெக்டர் விஷ்ணு அனுமதி மறுத்தார்.
ஆனால், அனைத்து குவாரிகளும் தற்போது மீண்டும் இயங்கி வருகின்றன. கல் குவாரிகளில் சிறுவர்களை பணி அமர்த்தக் கூடாது என்ற விதி இருந்தும், சில தினங்களுக்கு முன் மானுார் குவாரியில் 15 வயது வட மாநில சிறுவன் இயந்திரத்தில் சிக்கி பலியானார்.
எனினும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரங்களையும் ராயன் தோண்டி எடுத்து சுரங்க துறைக்கு புகார் அனுப்பினார்.
சில தியேட்டர்களிலும், வணிக நிறுவனங்களிலும் நேரடி ஆய்வு செய்யாமலே மின் இணைப்பு வழங்கியது குறித்து மின்வாரிய விஜிலென்சில் இவர் அளித்த புகார் மீதும் நேற்று மதியம் விசாரணை நடக்க இருந்தது. அதிலும் அவர் சாட்சியம் கூற இருந்தார்.
கொலை மிரட்டல்
திருநெல்வேலி மாநகராட்சியில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் கடந்த ஆட்சியில் நடந்தன.
அந்த பணிகள் இன்றும் தொடர்கின்றன. அவற்றில் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்திற்கு உள்ளூர் திட்ட குழுமம் உள்ளிட்ட எந்த துறைகளிலும் அனுமதி பெறவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், விதிமுறைகளை பின்பற்றாமல் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.
இதுகுறித்து ராயன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமம் விஷயங்களில் தலையிடாதீர்கள் என, பெர்டின் ராயனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன.
அதுகுறித்து திருநெல்வேலி போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்திருந்தார்.
போலீசார் கண்டு கொள்ளவில்லை. தற்போது வெட்டுக் காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.