ADDED : மே 30, 2024 01:36 AM
சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தலா, 750 முதல், 1,500 கார்டுதாரர்கள் உள்ளனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, ஒரு கடையில் ஆறு முதல் ஏழு கார்டுதாரர்களை உள்ளடக்கிய விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மாதந்தோறும் ரேஷன் கடையில் கூட்டம் நடத்தி, உணவு பொருட்கள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஏதேனும் குறை, முறைகேடு இருந்தால், கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட விஜிலென்ஸ் குழுவில் புகார் செய்ய வேண்டும்.
அங்கும் தீர்வு கிடைக்காத பட்சத்தில், உணவு வழங்கல் துறை ஆணையர் தலைமையில் செயல்படும் மாநில விஜிலென்ஸ் குழுவில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடை விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகிறது. எனவே, ரேஷன் கடை முறைகேட்டை தடுக்க, விஜிலென்ஸ் குழு மாற்றி அமைக்கப்பட உள்ளது.
உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிதாக நியமிக்கப்பட உள்ள குழுவில், நுகர்வோர் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என, சமூக அக்கறையுடன் செயல்படும் நபர்கள் நியமிக்கப்படுவர். குழுவின் கூட்டம் முறையாக நடத்தப்படும்.
இதனால், ரேஷன் கடைகளின் செயல்பாட்டை, குழுவே தீவிரமாக கண்காணிக்கும் என்பதால், தவறுகள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.