வருமான வரி சிக்கலுக்கு தீர்வு அரசு ஊழியர்கள் நன்றி
வருமான வரி சிக்கலுக்கு தீர்வு அரசு ஊழியர்கள் நன்றி
ADDED : ஏப் 28, 2024 12:53 AM
சென்னை: அரசு ஊழியர்கள் வருமான வரி பிடித்தம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களை களைந்ததற்காக, நிதித்துறை செயலருக்கு, தலைமை செயலக சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சங்க நிர்வாகிகள், கடந்த 23ம் தேதி நிதித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அதில், 'ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற மென்பொருள் வழியே, ஏப்ரல் மாத ஊதியத்தில், வருமான வரி பிடித்தம் செய்வதில், பல சிக்கல்கள் உள்ளன.
இவற்றை களைந்து, இம்மாத சம்பளத்தை உரிய வருமான வரி பிடித்தத்துடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, மென்பொருளில் உள்ள சிக்கல்களை களைந்து, ஏப்ரல் மாத சம்பளத்தை இடைக்கால ஏற்பாடாக, ஏற்கனவே மார்ச் மாதம் செலுத்திய வருமான வரி பிடித்தத்தோடு பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'மே மாதம் முதல் வருமான வரி சட்டத்தின் அடிப்படையில், வருமான வரி பிடித்தம் செய்வதற்கான உரிய வழிமுறைகளை, எந்தவித தடங்கலுமின்றி, பணியாளர்கள் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

