ADDED : ஜூன் 26, 2024 03:45 AM
சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பா.ஜ., சார்பில் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அவர் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டம், காவல் கிணறு முதல் நாகர்கோவில் வரை, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அங்கிருந்து திருவனந்தபுரம் செல்வது சிரமமாக உள்ளது. அமைச்சர் அப்பகுதியை ஆய்வு செய்து, அதை சரி செய்ய வேண்டும்,'' என்றார்.
அதை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை கத்பட், மேஜையை தட்டி வரவேற்றார்.
அதைக்கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டசபை இன்று விசித்திரமான சம்பவங்களை காலை முதல் பார்த்துக் கொண்டிருக்கிறது.
காலையில், பா.ஜ., உறுப்பினர் வானதி, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு, மிகவும் கரிசனத்துடன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நாகைமாலி பேசுகையில், கார்ல் மார்க்சை எல்லாம் விட்டு விட்டு, வீரத்தளபதி விவேகானந்தர் என்று பேசினார்.
இவற்றுக்கு மேல் தற்போது பா.ஜ., உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட் பலமாக கை தட்டுகிறார். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என்னமோ நடக்கிறது. மர்மமாக இருக்கிறது,” என்றார்.
அவர் இவ்வாறு கூறியதும், சபையில் சிரிப்பலை எழுந்தது.
அதைத் தொடர்ந்து நாகை மாலி எழுந்து, “நான் வீரத்துறவி விவேகானந்தர் குறித்து குறிப்பிட்டதை, அமைச்சர் குறிப்பிட்டார். எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். விமர்சனத்தை தாண்டி, திராவிட இயக்கவாதிகளும், பொதுவுடைமைவாதிகளும், விவேகானந்தர் கூறியவற்றில் நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம்,” என்றார்.

