போர் விமானங்களால் ஒலி மாசா? ஏற்க முடியாது என்கிறது- பசுமை தீர்ப்பாயம்
போர் விமானங்களால் ஒலி மாசா? ஏற்க முடியாது என்கிறது- பசுமை தீர்ப்பாயம்
ADDED : ஆக 16, 2024 01:08 AM
சென்னை:'விமானப்படை விமானங்களால் ஒலி மாசு ஏற்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
'கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்ற எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து பயணியர் விமானங்கள், விமானப்படை விமானங்கள், ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.
'இவற்றால் எழும் இடைவிடாத சத்தத்தால், அந்த பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சரியாக துாங்க முடியாமல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே, எச்.ஏ.எல்., நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்' என, பெங்களூரில் வசிக்கும் பாலமுரளி கிருஷ்ணா என்பவர், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., 1941 முதல் இயங்கி வருகிறது. மனுதாரரே, 2010க்கு பிறகு தான் அப்பகுதியில் வீடு வாங்கியுள்ளார்; 2019ல் தான் குடியேறியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
எச்.ஏ.எல்., நிறுவன செயல்பாடுகள் குறித்து, இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
எச்.ஏ.எல்., நிறுவனத்தை ஜக்கூர், யெலஹங்காவுக்கு மாற்றுவது சாத்தியமற்றது. பாதுகாப்பு துறை நிறுவனமான எச்.ஏ.எல்., செயல்பாடுகளை மாற்ற முடியாது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

