ADDED : ஜூலை 26, 2024 01:22 AM
சென்னை:'சந்திரயான் - 3 விண்கலம் அனுப்பிய சாதனையை நினைவுகூர, ஆக., 23ம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாட வேண்டும்' என, பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள, சந்திரயான் - 3 விண்கலம் ஏவப்பட்ட சாதனை நாளை நினைவுகூரும் வகையில், ஆக., 23ம் தேதியன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தேசிய விண்வெளி தினத்தின் முதலாவது நிகழ்ச்சி, ஆக., 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 'நிலவைத் தொடுவது உயிர்களை தொடுவதாகும்' என்ற தலைப்பில், தேசிய விண்வெளி தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படும்.
கல்லுாரிகள், பல்கலைகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

