ஊழலை விசாரிக்க சிறப்பு குழு: அ.தி.மு.க., மாமன்ற குழு வலியுறுத்தல்
ஊழலை விசாரிக்க சிறப்பு குழு: அ.தி.மு.க., மாமன்ற குழு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2024 06:38 AM

கோவை : 'கடந்த இரு ஆண்டுகளில், கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, சிறப்பு குழு நியமித்து, அரசு விசாரிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த கல்பனா, உடல் நிலையை காரணம் காட்டி, பதவியை ராஜினாமா செய்தார். நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில், அவரது ராஜினாமாவை பதிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
மேயராக இருந்த கல்பனா, ராஜினாமா செய்த விவகாரத்தை, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால், கவுன்சிலர் பதவியையும் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
எதற்காக ராஜினாமா செய்தார் என்பதை, கோவை மாநகர மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். மேயராக இருந்த கல்பனா, மிகப் பெரிய தவறு செய்திருக்கிறார். அதை அ.தி.மு.க., கண்டறிந்து, வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
இதுவரை மாநகராட்சியில் கட்டப்பஞ்சாயத்து தான் நடந்தது. 'வாட்ஸாப்' குழு உருவாக்கி, டெண்டர் இறுதி செய்தனர். உள்ளாட்சி வரலாற்றில், வாட்ஸாப்பில் டெண்டர் நடத்தியது இவர்கள் மட்டும் தான்.
இரு ஆண்டுகளில் நடந்த ஊழல்களை கண்டறிய, தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். கல்பனா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை; அவரை மறைத்து வைத்திருக்கின்றனர் என நினைக்கிறோம். அவராகவே ராஜினாமா கடிதம் கொடுத்தாரா; கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினாரா என தெரியவில்லை.
இதுவரை இருந்த மேயர், கோவைக்கு எதுவும் செய்யவில்லை. இனி வரப்போகும் மேயரும், பொம்மை மேயராகவே இருப்பார். அதனால், இனியாவது மக்களுக்கு பணியாற்ற, மாநகராட்சி கமிஷனர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

