செயலில் வேகம்; சொல்லில் கவனம்: கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை
செயலில் வேகம்; சொல்லில் கவனம்: கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை
ADDED : ஆக 28, 2024 05:15 AM

சென்னை : 'கடல் கடந்து சென்றாலும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் மீதே என் கவனம் இருக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கு பயணத்தில், மற்றொரு கட்டம்தான், நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.
நாளை, சான்பிரான்சிஸ்கோவில் நடக்கவுள்ள முதலீட்டாளர் சந்திப்பில் உரை நிகழ்த்துவதுடன், 31ல் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். செப்., 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன்.
தொழில் முதலீடு
அங்கு, 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்து, தொழில் துவங்க அழைப்பு விடுக்கிறேன். 'பார்ச்சூன் 500' நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறேன்.
இவை அனைத்தும் தமிழகம் தொழில் வளம் பெறவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள். தொழில் முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித் தராமல் இருக்க முடியுமா?
அடுத்த மாதம் 7-ல், சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது. கடந்த 1971ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிகாகோ பல்கலை அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அயல்நாடு சென்றாலும், தமிழகத்தில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடக்கிறது என, மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்க்கும்.
கட்டுப்பாடு
அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். ஆட்சிப் பணியும், கட்சி பணியும் தொய்வின்றி தொடர்வதற்கு ஏற்ற வகையில், ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றுடன் ஒருங்கிணைந்து, ஒவ்வொருவரும் தங்கள் கடமையை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கிற வகையில், செயலில் வேகம்,- சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.
அமெரிக்காவில் இருந்தாலும் தமிழகத்தை பற்றியேதான் என் மனம் சிந்திக்கும்; பார்வை கண்காணிக்கும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.