மேற்கு தொடர்ச்சி மலையில் 'இலங்கை தவளை வாயன்'; பறவை ஆர்வலர்கள் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையில் 'இலங்கை தவளை வாயன்'; பறவை ஆர்வலர்கள் தகவல்
ADDED : மார் 07, 2025 04:34 AM

தமிழகம் மற்றும் கேரள எல்லையில், மேற்கு தொடர்ச்சி மலையில், 'இலங்கை தவளை வாயன் பறவை, இலங்கை வளைகுடா ஆந்தைகள்' இருப்பது, இப்பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது என, பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் துவங்கி, தமிழகத்தின் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை ஒட்டிய பகுதி, நீலகிரி உயிர்சூழல் மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில், வன உயிரினங்கள், பறவைகளை தேடும் பணியில், ஏராளமான வன உயிரின மற்றும் பறவை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஒவ்வொரு நாளும், பல்வேறு புதிய உயிரினங்கள் உலகின் பார்வைக்கு வருகின்றன.
அந்த வகையில் எளிதாக அடையாளப்படுத்தி பார்க்க முடியாத வகையில் காணப்படும், சில பறவைகள் குறித்த விபரங்கள், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பொதுவாக பறவைகள் அதன் நிறம் மற்றும் அலகுகள் அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றன.
தட்டையான வாய்
தவளை போன்ற வாயுள்ள பறவைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. 'சிலோன் பிராக் மவுத்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும், இலங்கை தவளை வாயன் பறவைகள், மேற்கு தொடர்ச்சி மலையில், பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் மட்டுமே காணப்படுவது, இப்பறவைகளில் சிறப்பு அம்சம்.
காய்ந்த இலை சருகுகளுக்கு, இணையான வண்ணத்தில், தவளை போன்ற தட்டையான வாயுடன், இந்த பறவைகள் காணப்படும். பொதுவாக வெப்ப மண்டல காடுகளில், காய்ந்த இலைகள் இருக்கும் மரங்களில், இப்பறவைகள் அமர்ந்து இருக்கும். நீண்ட நேரத்துக்கு எவ்வித அசைவும் இன்றி காணப்படும். மரங்களில் வாழும், குறிப்பிட்ட சில வகை பூச்சிகளை பிடித்து, அதை எளிதாக உண்பதற்காக, இதற்கு தவளை போன்ற வாய் பயன்படுவதாக கூறப்படுகிறது.
வளைகுடா ஆந்தை
'சிலோன் பே அவுல்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும், இலங்கை வளைகுடா ஆந்தைகளும், வெப்ப மண்டல காடுகளில், மரங்களுக்கு நடுவில் மறைந்து இருக்கும் தன்மை உடையவை. இரவில் மட்டும் கண் திறந்து பார்ப்பது, அக்கம் பக்கத்தில் நடமாடுவது, இவற்றின் சிறப்பம்சம்.
இதுகுறித்து, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், 'தெட்டேகாடு' பறவைகள் சரணாலய வழிகாட்டி அஜ்மோன் கூறியதாவது:
இலங்கை தவளை வாயன், இலங்கை வளைகுடா ஆந்தை, ஆகிய இரண்டு வகை பறவைகளும், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில், தமிழகத்தின் முதுமலை, கர்நாடகத்தின் மைசூரு வனப்பகுதியில் ஆர்வலர்களால் பார்த்து உறுதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் இப்பறவைகளை பார்க்க முடியாதவர்கள், தெட்டேகாடு பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றனர். இங்கு, குறிப்பிட்ட இடங்களில் இவற்றை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -