ADDED : ஏப் 02, 2024 12:03 AM

சென்னை :தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரமே இருக்கும் நிலையில், கச்சத்தீவு பிரச்னையை பாரதிய ஜனதா மேலிடம் கிளப்பியிருப்பது, தமிழக கட்சிகளிடம்வியப்பையும், சந்தேகத்தையும் உருவாக்கி இருக்கிறது.
இது, மோடியின் திசை திருப்பும் தந்திரம் என்று தி.மு.க., சொல்கிறது. அதன் தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேரடியாக மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். இதற்கு பதில் சொல்லி விட்டு, மற்ற பிரச்னைகளை எழுப்புங்கள் என்று, அவர் மாற்றுத்திசையில் கைகாட்டுகிறார்.முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
பத்தாண்டுகளாக கும்பகர்ண துாக்கத்தில் இருந்து விட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம், தமிழக மக்கள் கேட்கும் கேள்விகள் மூன்று தான்.
1. தமிழகம் 1 ரூபாய் வரியாக தந்தால், மத்திய அரசு 29 காசு மட்டுமே திருப்பித்தருவது ஏன்?
2. இரண்டு இயற்கை பேரிடர்களை அடுத் தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழகத்திற்கு1 ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சியில், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டம் என, ஒன்றாவது உண்டா?
திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் மோடி; பதில் சொல்லுங்கள் மோடி என்று ஸ்டாலின்
கூறியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் குற்றச்சாட்டுக்கு பிரதான இலக்கான காங்கிரஸ் கட்சியும் சந்தேகம் எழுப்புகிறது. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் திடீரென கச்சத்தீவு விவகாரத்தை மோடி அரசு கிளறுவதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறது.
இலங்கை அரசுடன் பேசி, ஏதோ உடன்பாட்டுக்கு மத்திய அரசு வந்திருக்க வேண்டும்; நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அதை இப்போது அறிவிக்க முடியாது. அதனால், வேறு விதமான நாடகத்தை அரங்கேற்றுகிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
தலைவர்கள் முடிவு
எக்காரணம் கொண்டும் கச்சத்தீவு பிரச்னை வாயிலாக, தேர்தல் ஆதாயம் பெற பா.ஜ.,வை அனுமதிக்கக்கூடாது என, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மீனவர் பிரச்னையில், மோடி அரசின் செயல்பாடு குறித்த தகவல்களை வரிசையாக நினைவுபடுத்த தீர்மானித்துள்ளனர்.அணிவகுத்து வர இருக்கும் ஆதாரங்கள் பா.ஜ.,வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் என்று, இரு கட்சி நிர்வாகிகளும் கூறினர்.
'காங்கிரஸ் அரசு தந்தது எவ்வளவு?'
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலினை நோக்கி மக்கள் கேட்கும் 4 கேள்விகள்...
1 நெடுஞ்சாலை, விரைவு சாலை, மேம்பாலம், அதிவிரைவு ரயில், புதிய ரயில், புதிய விமான நிலையம், துறைமுக மேம்பாடு என வாஜ்பாய் ஆட்சியிலும்; மோடி ஆட்சியிலும் மேற்கொண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் தான், தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன என்பதை மறுக்க முடியுமா?
2 தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போது, தமிழகம் வரியாக தந்த 1 ரூபாய்க்கு காங்கிரஸ் கூட்டணி அரசு திருப்பித் தந்தது எத்தனை பைசா?
3 மக்கள் தொகை அதிகமுள்ள உ.பி., பீஹார், மேற்கு வங்க மக்களுக்கு உதவக்கூடாது என்பது தான், 'இண்டியா' கூட்டணியின் நிலைப்பாடா?
4 மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போது, தமிழக இயற்கை பேரிடர்களுக்கு அன்றைய அரசு கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு?

