2019 ல் இபிஎஸ் அடிக்கல் நாட்டிய அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
2019 ல் இபிஎஸ் அடிக்கல் நாட்டிய அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
UPDATED : ஆக 17, 2024 10:53 AM
ADDED : ஆக 17, 2024 01:12 AM

திருப்பூர்: தமிழகத்தில், விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் வாயிலாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்ப உதவும். திட்டப்பணிகள், 1,916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று அர்ப்பணித்தார். அதிமுக ஆட்சியில் 1,652 கோடியில் திட்டம் துவங்கிய நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் 300 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வையில், 'எல் அண்டு டி' நிறுவனத்தால் பணி மேற்கொள்ளப்பட்டது.
100 சதவீதம்
இத்திட்ட கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து, பின், நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்று, பணி ஓய்வு பெற்றுள்ள சிவலிங்கம், திட்டம் குறித்து நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நீரேற்று நிலையம் வாயிலாக நீர் வினியோகிக்கும் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் அதிகம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், விவசாய பயன்பாட்டுக்கு, 'பம்பிங்' வாயிலாக நீர் வினியோகிப்பது இதுவே முதன்முறை.
பவானி ஆற்றில் உபரியாக வெளியேறும் நீரை, காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தேக்கி, ஆண்டுக்கு 70 நாட்கள், வினாடிக்கு, 250 கன அடி வீதம், 1.5 டி.எம்.சி., நீரை பெற திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்துக்கென, ஆறு இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர், 106 கி.மீ., துாரத்துக்கு 'பம்பிங்' செய்து கொண்டு வரப்படுகிறது.
மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கி.மீ., நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 24,500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, பவானி ஆறு சார்ந்த பெரும்பள்ளம், குண்டேறி பள்ளம், வரட்டுப்பள்ளம் பகுதிகளில் பெய்யும் மழை என, மழையளவை கணக்கிடும் போது, 83 சதவீதம் இத்திட்டம் வெற்றிகரமாக அமையும்.
அதாவது, 10 ஆண்டில் 2 ஆண்டுகள் மட்டும், திட்டத்துக்கான உபரிநீர் கிடைப்பது கடினம். திட்டப்பணியை மேற்கொண்டு வரும், 'எல் அண்டு டி' நிறுவனத்தினரே திட்டத்தை வடிவமைத்து, அதை ஐந்தாண்டுகள் இயக்கி பராமரித்து, பின் ஒப்படைக்க வேண்டும் என்பது திட்ட விதி.
நீர் செறிவூட்டும் பணி, 100 சதவீதம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. குளம், குட்டைகளில், சோலார் மின்னாற்றலில் இயங்கும் ஓ.எம்.எஸ்., எனப்படும் அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டத்திற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, பம்பிங் ஸ்டேஷனில் இருந்தபடியே, கம்ப்யூட்டர் வாயிலாக குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் பணியை கண்காணிக்க முடியும்; செயல்படுத்த முடியும்.
மின் வினியோகம்
ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும், 8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன; இதில், ஆறு மோட்டார்கள் இயக்கப்பட்டு, தண்ணீர் 'பம்ப்' செய்யப்படும்; இரு மோட்டார்கள், 'மாற்று' என்ற நிலையில் இருக்கும்.
நீரேற்று நிலையங்களில் பொருத்தப்பட்டு உள்ள வெர்டிகல் டர்பைன் மோட்டார் பம்ப், ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை.
எலக்ட்ரிக்கல் ஆட்டோ மெஷின் மற்றும் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ்., ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. உலகின் சிறந்த 'அப்டேட்' தொழில்நுட்ப உபரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குழாய் பதிக்கப்பட்டுள்ள, 1,065 கி.மீ., தொலைவில், ஐந்து இடங்களில் ரயில்வே தண்டவாளத்தை கடந்தும், ஐந்து இடங்களில் நெடுஞ்சாலையை கடந்தும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; குழாய்களை இணைக்க, 1,030 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப சவால்களை கடந்து இப்பணி முடிக்கப்பட்டுள்ளது.
நீரேற்று நிலையங்களில், மின்வாரியம் சார்பில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது; தடையற்ற மின் வினியோகம் கருதி, யு.பி.எஸ்., உபகரணமும் பொருத்தப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நேரடி பார்வையில் பணி நடந்தது; 15 நாட்களுக்கு ஒரு முறை திட்டப்பணியின் நிலை குறித்து கேட்டறிவார். தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் அவ்வப்போது திட்டப்பணி குறித்து கேட்டறிந்து வந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

