சென்னையில் 22ம் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 6 மாநில முதல்வர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு
சென்னையில் 22ம் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 6 மாநில முதல்வர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு
ADDED : மார் 07, 2025 09:07 PM
சென்னை:லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க, வரும் 22ம் தேதி, சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி, ஆறு மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து, கடிதம் அனுப்பி உள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டில், 1952, 1963, 1973ம் ஆண்டுகளில், லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தாமதமானதால், தொகுதி மறுவரையறை 2031ம் ஆண்டுக்கு பின் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே அது நடக்கும் என தற்போது தெரிய வருகிறது.
அதனால், மாநில நலன்களை பாதுகாக்க, மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது. தொகுதி மறு வரையறை பணிகள் நடக்கும்போது, நாட்டின் முன்னுரிமை திட்டங்களுக்கு, சிறந்த பங்களிப்பை வழங்கிய, மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. வரும் 2026ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்கு உள்ளாகும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய, சிறந்த மாநிலங்கள், லோக்சபாவில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவதை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையை பெற நேரிடும். அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வுகள், பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறு வரையறை செய்யப்பட உள்ளதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முதல் அணுகுமுறையில், 543 இடங்களை மாநிலங்களுக்கு இடையே மறுபகிர்வு செய்யலாம். இரண்டாவது அணுகுமுறையில், 800 தொகுதிகளுக்கு மேல் அதிகரிக்கப்படலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள், கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.
இது குறித்து, நம்முடைய கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு உறுதி அளிக்கவில்லை. மத்திய அரசின் பிரதிநிதிகள், வெற்று வாய்சொற்கள் வாயிலாக, எந்த மாநிலமும், அதன் தொகுதிகளை இழக்காது என்கின்றனர்.
நமது மக்களாட்சியின் அடித்தளமே ஆபத்தில் இருக்கும்போது, இதுபோன்ற தெளிவற்ற உத்தரவாதங்களை ஏற்க முடியுமா. தொகுதி மறுவரையறையால், அச்சுறுத்தலை எதிர் கொள்ளக்கூடிய மாநிலங்களை ஒருங்கிணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சேர, தங்களின் ஒப்புதல் வேண்டும். கூட்டு நடவடிக்கை குழுவில், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்க, தங்கள் கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டும். கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம், வரும் 22ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.