கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும் பேச்சு ஸ்டாலின் வருத்தம்
கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும் பேச்சு ஸ்டாலின் வருத்தம்
ADDED : ஆக 02, 2024 12:43 AM
சென்னை: ''கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான பேச்சுக்கள் மீண்டும் எழத் துவங்கி இருக்கின்றன. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை மாணவர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை லயோலா கல்லுாரி நுாற்றாண்டு துவக்க விழாவில், அவர் பேசியதாவது:
இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும், அதில் தலைசிறந்த கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
காமராஜரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. கருணாநிதி ஆட்சி கல்லுாரி கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சி, உயர் கல்வியின் பொற்காலமாக, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக திகழ்கிறது.
கல்வியின் தேவையை அடுத்தடுத்து வரும் மாணவர்களிடமும், பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், கல்விக்கான தடைகள், புதிய வடிவங்களில் வர துவங்கி இருக்கின்றன. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற மாதிரியான பேச்சுக்கள், மீண்டும் எழத் துவங்கி இருக்கின்றன.
அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மாணவர்களான நீங்கள் அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு பேசினார்.