அபத்தமாக பேசுகிறார் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜோஷி ஆவேசம்
அபத்தமாக பேசுகிறார் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜோஷி ஆவேசம்
ADDED : மார் 09, 2025 01:28 AM

ஹுப்ளி: “ஊழல் மற்றும் தோல்வியை மறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்,” என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டி:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், மத்திய அரசை ஸ்டாலின் எதிர்க்கிறார். அவருடைய எதிர்ப்பு தவறானது. தன் ஆட்சியில் நடக்கும் ஊழல் மற்றும் தோல்வியை மறைக்கவே, இதை ஊதிப் பெரிதாக்குகிறார். தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதற்காக ஸ்டாலின் அமைக்கவிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு தேவையற்றது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக, இதுவரை எந்த விதிமுறைகளும் இல்லாதபோது, ஸ்டாலின் அமைக்கவிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு என்ன செய்யும்?
எல்லோரும் அச்சப்படுவது போல, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டார்.
அதையும் தமிழகம் வந்தபோதுதான் தெரிவித்துள்ளார். அதன்பின்பும், தொகுதி மறுவரையறை விஷயத்தில் ஸ்டாலின் அபத்தமாக பேசி வருகிறார். இது சரியல்ல,'' என்றார்.