பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் தேர்தலுக்கு பின் கைகோர்க்கும் கட்சியினருக்கு ஸ்டாலின் கடிதம்
பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் தேர்தலுக்கு பின் கைகோர்க்கும் கட்சியினருக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஏப் 17, 2024 11:59 PM
சென்னை:'பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாடிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பின் கைகோர்த்து விடுவர்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் எதிரிகள். தமிழகத்தில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் முன்னேwறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.
தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. பா.ஜ., போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து, அ.தி.மு.க., தனியாக நிற்கிறது.
தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ., மற்றும் பாழ்படுத்திய அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணியையும், தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாடிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பின் கைகோர்த்து விடுவர். மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின் பா.ஜ.,வுக்கு தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பர்.
தமிழகத்தில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று எப்போதும்வென்றான் என, கருணாநிதி அடிக்கடி குறிப்பிடுவார். தி.மு.க.,வும் எப்போதும், எல்லா தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.
கருத்துக் கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழகத்தை திரும்பி பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.
பா.ஜ., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். 'இண்டியா' கூட்டணியின் வெற்றியில் தான் நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழகத்தின் முன்னேற்றமும் இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.
ஜனநாயகத்தைக் காக்கும் போர்க் களத்தில் நீதியின் பக்கம் நின்று, வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தர வேண்டும் என, உரிமையோடு கேட்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

