ADDED : ஜூன் 20, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்து படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிறது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்கள் உள்ளனர்; 162 படகுகள் உள்ளன.
மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க துாதரக நடவடிக்கை வழியாக இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.