மகப்பேறுக்கு பின் பணிக்கு வரும் பெண் போலீசுக்கு டிரான்ஸ்பர் சலுகை ஸ்டாலின் அறிவிப்பு
மகப்பேறுக்கு பின் பணிக்கு வரும் பெண் போலீசுக்கு டிரான்ஸ்பர் சலுகை ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஆக 24, 2024 02:05 AM

சென்னை,:''மகப்பேறு விடுமுறைக்குப் பின் பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் வசிக்கும் மாவட்டங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பணி மாறுதல் செய்யப்படுவர்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி, போலீசாருக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன. அவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வரவேற்று பேசினார்.
அணிவகுப்பு மரியாதை
நிகழ்ச்சியில், தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா உட்பட, 68 பேருக்கு பதக்கம் அணிவித்து, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். மீதம் 407 பேருக்கு, கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கினர். முன்னதாக, முதல்வருக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி பிருந்தா தலைமையிலான போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக காவல் துறையில், பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் பணிக்கும் திரும்பும் போது, குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சிறப்பு திறன் பயிற்சி
அதை ஏற்று, மகப்பேறு விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்களின் பணி மூப்புக்கு விலக்களித்து, அவர்களின் பெற்றோர் அல்லது கணவர் வீட்டை சேர்ந்தோர் வசிக்கும் மாவட்டங்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல்களை தீர்ப்பதில், பெண் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.
இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில், பெண்காவலர்களின் தொழில் முறை திறன்களை மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, 'சைபர்' குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு, அவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

