அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் சென்னை ஐ.ஐ.டி.,யில் திறப்பு
அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் சென்னை ஐ.ஐ.டி.,யில் திறப்பு
ADDED : ஆக 20, 2024 02:03 AM

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப துறையின் மேம்பாட்டுக்காக, 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனம் அளித்த, 16.5 கோடி ரூபாய் நிதியில், அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், கடந்தாண்டு முதல் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப துறை செயல்படுகிறது. இதை உலகத்தரம் வாய்ந்த துறையாக மாற்றும் முயற்சியில், உலகத் தரமான ஆய்வகத்தை அமைப்பதற்காக நிதி திரட்டும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டது.
இந்நிலையில், பி.எப்.சி., என்ற, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், 16.5 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது. இந்த நிதியில் அதிநவீன ஆய்வுக்கூடம் கட்டப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில், பி.எஸ்., பட்டப்படிப்பு படிப்போருக்கு, அதிநவீன கருவிகளின் வாயிலாக, பாடங்களை விளக்கவும், புதிய தொழில்நுட்பங்களின் வாயிலாக கல்வி கற்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக, உலர் உடற்கூறியல் சார்ந்த அதிநவீன ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு வாய்ந்த மருத்துவ கருவிகளை உள்நாட்டில் தயாரித்து, இறக்குமதி சுமையை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வக திறப்பு விழாவில், பி.எப்.சி., நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான பர்மித்தர் சோப்ரா, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, டீன் மகேஷ் பஞ்சக்நுலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பி.எப்.சி., நிர்வாக இயக்குனர் பர்மித்தர் சோப்ரா கூறுகையில், “இந்த ஆய்வகம், உடற்கூறியல் துறையில் புதிய கருவிகள் கண்டுபிடிக்கவும், மருத்துவ துறையில் புதிய ஆய்வுகளை செய்யவும் உதவும்,” என்றார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், “சென்னை ஐ.ஐ.டி.யில், உலகத்தரமான ஆய்வகம் அமைக்கும் கனவு, பி.எப்.சி.,யால் நிறைவேறி உள்ளது. இதனால், மருத்துவ கல்வியில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும், மருத்துவ கருவிகளை கண்டுபிடிக்கவும் முடியும்,” என்றார்.