மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் மாநிலம் முழுதும் சூரிய மின் நிலையம்
மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் மாநிலம் முழுதும் சூரிய மின் நிலையம்
ADDED : ஆக 14, 2024 12:34 AM
சென்னை:பிரதமர் சூரிய மின் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு கிராமத்திற்கு சூரியசக்தி மின்சாரம் வினியோகிக்க, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, பிரதமரின் சூரியசக்தி இலவச மின் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின்கீழ், ஒரு கிலோ வாட் திறனில் மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும்; 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.
அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும், 18,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.
பிரதமரின் திட்டத்தின் கீழ், மாதிரி சூரிய கிராமம் என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்திற்கு தேவைப்படும் மின்சாரம் முழுதும் சூரியசக்தி மின் நிலையம் வாயிலாக வினியோகம் செய்யப்பட்ட உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதமரின் திட்டத்தின் கீழ், கிராமங்களில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு தலா ஒரு கிராமத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கிராமத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் கிராமங்களை அடையாளம் காணும் பணி துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.