sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமராவதி ஆற்றங்கரையில் மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு

/

அமராவதி ஆற்றங்கரையில் மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு

அமராவதி ஆற்றங்கரையில் மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு

அமராவதி ஆற்றங்கரையில் மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு


ADDED : மார் 04, 2025 05:23 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி ஆற்றங்கரை பகுதியில், வரலாற்று ஆய்வு நடுவத்தினரால், கி.பி., 8ம் நுாற்றாண்டைச்சேர்ந்த மகாவீரர் சிலை கண்டறியப்பட்டுள்ளது.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள அமராவதி ஆற்றின் கரையோரங்களில், நதிக்கரை நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள், கல்வெட்டுச்சான்றுகள், தொல்லியல் சின்னங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மடத்துக்குளம் ஆற்றின் கரையில், மத்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, அருட்செல்வன், சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, முட் புதர்களுக்குள் காணப்பட்ட கற்சிலை, நான்கு அடி உயரத்தில், மூன்று வெண்கொற்றக்குடைகளுடன், மேலிருந்து இரண்டு பெண்மணிகள் வெண்சாமரம் வீசுவது போன்று சிற்பங்களும், மகாவீரர் அமர்ந்த நிலையிலும், அவருக்கு கீழே மூன்று சிங்கங்களும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:


இங்கு கிடைத்துள்ள மகாவீரர் சிலை கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்ததாகும்.

இந்த சிலை காணப்பட்ட பகுதிக்கு மிக அருகில், திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகாவிலுள்ள சாமிநாதபுரம் என்ற ஊர் உள்ளது.

இது ஈரோடு அருகே விஜயமங்கலம் அருகே வழக்கில் உள்ள, சீனாபுரம் எனும் சைனபுரத்தை ஒத்திருக்கிறது. சாமிநாதபுரம் என்பதில், நாதர் என்பது தீர்த்தங்கரர்களில் பார்சுவ நாதரையும், ஆதிநாதரைக் குறிக்கும் சொற்றொடராகவும் வழக்கில் இருந்துள்ளது.

இந்த சமணநாதபுரம் பிற்காலங்களில், சாமிநாதபுரம் என்று மருவியிருக்கலாம். அது மட்டுமின்றி, நாதபரம் என்பது சாமி எனும் முன்னொட்டு சேர்க்கப்பட்டு சாமிநாதபுரமாக மாறியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, பழங்காலத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், சமணர்கள் வசித்ததற்கான, கல்வெட்டு, தொல்லியல் சான்றுகள் அதிகளவு கிடைத்துள்ளது.

உடுமலை பகுதியில் ஆதாழியம்மன் கோவில், திருமூர்த்தி மலை கோவில், ஐவர் மலை ஆகியவற்றில் சமணர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான சான்றுகள் உள்ளன. தற்போது இந்தக் கற்சிற்பத்தையும் இந்த சான்றுகளுடன் இணைத்துக்கொள்ளலாம்.

திருமூர்த்தி மலையில், மகாவீரர் சிலையும், ஐவர் மலையில், 16 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும், சமணப்படுக்கைகள் உள்ளன.

தற்போது சிலை கிடைத்த இடத்திலிருந்து அயிரை எனும் ஐவர் மலை சுமார், 8 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. எட்டாம் நுாற்றாண்டில் வரகுண பாண்டியன் ஆட்சிக்காலத்தில் சமண சமயத்தாருக்கு நிலங்கள் கொடுத்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளது.

தமிழக தொல்லியல் துறை இதனை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us