விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சால் வன்முறை மாண்டியாவில் கடைகளுக்கு தீ; 50 பேர் கைது
விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சால் வன்முறை மாண்டியாவில் கடைகளுக்கு தீ; 50 பேர் கைது
ADDED : செப் 13, 2024 06:14 AM

மாண்டியா: மாண்டியா, நாகமங்களாவில் விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தால் பதற்றம் நிலவுகிறது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைத்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க, நேற்று முன்தினம் இரவு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
பதரிகொப்பலு என்ற இடத்தில் ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டது. இதற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரம் மூண்டது.
கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் ஒரு துணிக்கடை, ஏழு பைக், ஒரு கார், ஒரு ஆட்டோ, தள்ளுவண்டிகள் எரிந்து நாசமாகின. கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், 52 பேரை கைது செய்தனர்.
அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க கோரியும் நேற்று காலை, கைதானவர்களின் உறவினர்கள் நாகமங்களா போலீஸ் நிலையம் முன், போராட்டம் நடத்தினர்.
நாகமங்களா டவுன், ரூரல் பகுதிகளில் நேற்றும் பதற்றம் நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 163 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.