கப்சா கதைகளை நிறுத்துங்கள்: கவர்னருக்கு ரகுபதி பதில்
கப்சா கதைகளை நிறுத்துங்கள்: கவர்னருக்கு ரகுபதி பதில்
ADDED : மார் 03, 2025 07:05 AM

சென்னை : 'தொகுதி மறுசீரமைப்பில், பா.ஜ.,வின் சதித்திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, கச்சத்தீவு பிரச்னையை கிளப்புகிறார் கவர்னர் ரவி'என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் மட்டுமல்லாது, தென் மாநிலங்கள் முழுதும் வஞ்சிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய விவகாரம், இந்தியா முழுமைக்கும் பேசு பொருளாகி இருக்கிறது.
தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள், எதிர்ப்பு குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. இந்தியா முழுமைக்கும், அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில், அதை திசைதிருப்ப, மத்திய அரசின் அஜெண்டாவை நிறைவேற்ற, கவர்னர் ரவி கச்சத்தீவை கையில் எடுத்திருக்கிறார்.
கடந்த 1974ல் பறிபோன கச்சத்தீவு குறித்து கவலைப்பட்ட பிரதமர் மோடி, அவர் கண்முன்னே, இந்தியாவின் 2,000 சதுர கி.மீ,, பகுதிகளை, சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார்.
கடந்த ராஜ்யசபா தேர்தலில், அறிவியல்பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி பிரதமர் மோடி அரசு கச்சத்தீவை கண்டிப்பாக மீட்கும் என, சொன்னவர்கள் எங்கே போயினர்.
தேர்தல் வரும்போதெல்லாம், கச்சத்தீவு கேடயத்தை துாக்கிக்கொண்டு வந்தவர்கள், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பா.ஜ.,வின் சதித்திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, கச்சத்தீவை மீண்டும் கிளப்புகின்றனர்.
பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி, கவர்னருக்கு நினைவு இருக்கிறதா; அப்படியான பதிலடி தொகுதி மறுசீரமைப்பிலும் கிடைக்கும்.
கச்சத்தீவு குறித்த கப்சா கதைகள் பேசுவதை கவர்னர் நிறுத்த வேண்டும்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட, நம் மீனவர்களை விடுதலை செய்ய, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். கவர்னர், அவரோடு போட்டியிட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.