'பா.ம.க.,வை இழிவாக பேசுவதை நிறுத்துங்கள்': 'கசப்புகளை மறந்து கைகோர்த்தோம்'
'பா.ம.க.,வை இழிவாக பேசுவதை நிறுத்துங்கள்': 'கசப்புகளை மறந்து கைகோர்த்தோம்'
ADDED : செப் 16, 2024 02:02 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அளித்த பேட்டி:
தமிழகத்தில் மது விலக்கு துறை அமைச்சர், 'மதுக் கடைகளை உடனடியாக மூடினால், தமிழகத்தின் சூழல் மிக மோசமாகி விடும்' என, தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். திராவிட மாடல் என்பது, தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலையை கொண்டு வந்துள்ளது.
முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்றார். இன்று, அது குறித்து ஒரு வார்த்தைகூட பேச மறுக்கிறார். மது இல்லாமல் ஆட்சி செய்ய முடியாதா; இதை விட கேவலம் வேறு என்ன? உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
பா.ம.க., ஜாதி கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி? பா.ம.க., சமூக நீதிக்காக துவக்கப்பட்ட கட்சி. கடந்த 37 ஆண்டுகளாக, ராமதாஸ் ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்று தந்துள்ளார். பா.ம.க.,வை திருமாவளவன் இழிவுபடுத்தி வருகிறார். எங்களாலும் தரக்குறைவாக பேச முடியும்.
மது ஒழிப்பு மாநாடை யார் நடத்தினாலும் ஆதரிப்போம். ஏனெனில், மது ஒழிப்பு எங்கள் கொள்கை. மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்.டி., படித்துள்ளோம். திருமாவளவன் எல்.கே.ஜி.,யை இப்போது தான் துவக்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு பின், மதுவின் பாதிப்பு திருமாவளவனுக்கு தெரிந்துள்ளது. நாங்கள் முன்பே தெரிந்து வலியுறுத்தி வருகிறோம்.
மது ஆலை அதிபர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு திருமாவளவன் ஏன் தேர்தல் பிரசாரம் செய்தார்? அவர்கள் இருவரும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 40 சதவீதம் மது சப்ளை செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வி.சி., தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
மது ஒழிப்பு மாநாடு, சமூக பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கும் மாநாடு. பாதிக்கப்பட்ட பெண்களின் அவலம் குறித்து பேசுவதற்கு பதிலாக, தேர்தல் அரசியல் என திரித்து பேசுவது வேதனை அளிக்கிறது.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என, நான் அறைகூவல் விடுத்தேன். இதை, 'எல்லாரும் சேர்ந்து ஒருமித்த குரல் கொடுப்பதில் என்ன தவறு?' என கேட்பதற்கு பதிலாக, 'இவர் ஏன் அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்தார்' என, ஒட்டுமொத்தமாக பிரச்னையை திசை திருப்புவது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவமதிப்பதாகும்.
மது ஒழிப்பில் நாங்கள் எல்.கே.ஜி.,யாக இருந்தாலும், எங்களுக்கு சமூக பொறுப்புணர்வு உள்ளது; மக்கள் புரிந்து கொண்டால் போதும். அன்புமணி எங்கள் முடிவை வரவேற்றுள்ளார்.
எங்களை பேச வைத்தது அவர்கள் தான். சிதம்பரத்தில் நான் முதன் முதலாக போட்டியிட்டபோது, வன்முறை ஏற்பட அவர்கள் தான் காரணம். இருந்த போதும் ராமதாஸ் உடன் இணைந்து சில ஆண்டுகள் பயணித்தோம்.
அடுத்து வந்த 2011 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து பயணித்தோம். அதன்பின் பா.ம.க., எடுத்த நிலைப்பாடு, தலித் வெறுப்பாக அமைந்து, அபாண்டமான அவதுாறுகள் பரப்பப்பட்டன.
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. யாரையும் காயப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் காயப்படுத்தப்பட்டோம்; ரத்தக் கறையோடு கைகுலுக்கினோம்; கசப்புகளை மறந்து கைகோர்த்தோம்.
ஆனால், தேர்தல் அரசியலுக்காக, வெறுப்பு அரசியலை பா.ம.க., விதைத்தது. அதன் காரணமாக, ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.