பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்; வழக்கில் ஐகோர்ட் நீதிபதி உத்தரவு!
பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்; வழக்கில் ஐகோர்ட் நீதிபதி உத்தரவு!
ADDED : மார் 29, 2024 04:40 PM

சென்னை: பிரதமர் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில், பள்ளி தலைமையாசிரியை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி 'தற்போதைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என கோவை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் கடந்த 18ம் தேதி பா.ஜ., சார்பில், மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் வரை நடந்த ரோடு ஷோ'வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த பேரணியின் ஒரு இடத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி கோவை சாய்பாபா வித்யாலயம் பள்ளி தலைமையாசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'தற்போதைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம். மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் போலீசார் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

