பாடப்புத்தகம், கைடு இல்லாமல் சென்னை பல்கலை மாணவர்கள் அவதி
பாடப்புத்தகம், கைடு இல்லாமல் சென்னை பல்கலை மாணவர்கள் அவதி
ADDED : ஜூலை 03, 2024 10:34 PM
சென்னை:சென்னை பல்கலை அறிமுகம் செய்துள்ள புதிய பாடத்திட்டத்தில், தமிழ் பாடத்துக்கு புத்தகங்கள், துணை புத்தகங்கள் இல்லாமல், மாணவர்களும், ஆசிரியர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கலை அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு, கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆனது. இது முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், உரிய குறிப்புப் புத்தகங்கள் இல்லை என்றும், கல்லுாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, தன்னாட்சி கல்லுாரிகள், இந்த பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயமில்லை என, உயர் கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில், சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள தன்னாட்சி அல்லாத கலை அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகமானது. இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகமாகியுள்ளது.
இதில் தமிழ் பாடத்துக்கு இன்னும் புத்தகங்களோ, துணை புத்தகங்களோ, வழிகாட்டி புத்தகங்களோ தயாரிக்கப்படவில்லை என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில கருத்தாக்கங்களின் தலைப்புகளை மட்டும், பாடத்திட்டமாக கொடுத்துள்ளதால், அதில் எந்தவிதமான சரிபார்த்தல் புத்தகங்களை பயன்படுத்த வேண்டும்; சென்னை பல்கலை வடிவமைத்து இறுதி செய்துள்ள பாடங்கள் எவை; புதிய பாடத்திட்டத்தின் எந்த அம்சங்கள் தேர்வில் இடம் பெறும் என்ற எந்த விபரமும், பல்கலையில் இருந்து அறிவிக்கப்படவில்லை என, ஆசிரியர்களும், மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
துணை வேந்தர் இல்லாத நிலையில், உயர் கல்வி செயலரின் நிர்வாகத்தில் நடக்கும் பல்கலையில், அகாடமி குழுக்கள் முறையாக செயல்பட்டு, புத்தகங்களை தாமதமின்றி தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.