பா.ஜ.,வின் கையெழுத்து இயக்கம் மாணவர்கள் பெரும் ஆதரவு: அண்ணாமலை
பா.ஜ.,வின் கையெழுத்து இயக்கம் மாணவர்கள் பெரும் ஆதரவு: அண்ணாமலை
ADDED : மார் 07, 2025 09:12 PM
கோவை:“பா.ஜ., இல்லாமல், தமிழகத்தில் அரசியல் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை விமான நிலையத்தில், அண்ணாமலை பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ., எடுத்துள்ள மும்மொழி கொள்கை முடிவுக்கு, ஆதரவு பெருகி வருகிறது. கையெழுத்து இயக்கத்தில் ஒவ்வொரு சாமானியரும், கையெழுத்து போடுகின்றனர்.
அமைச்சர் மகேஷ் சொல்லுவது போல், ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுத்து ஏன் வீணடிக்க வேண்டும். கொடுக்கிறோம் என்று மத்திய அரசு சொல்லவில்லை.
நீங்கள் கமிஷன் அடிக்கவும், கொள்ளையடிக்கவும் மத்திய அரசு ஏன் வாரிக் கொடுக்க வேண்டும்? பா.ஜ., மக்கள் அன்பை பெற்றுள்ளது. சட்டசபைத் தேர்தலில் ஒரு கோடிக்கும் மேலாக ஓட்டுக்களை பெற்று, ஆட்சிக்கு வருவோம். அமைச்சர் சுப்பிரமணியன், இதை பார்க்கத்தான் போகிறார்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள், மூன்று மொழி வேண்டும் என வரிசையில் நின்று கையெழுத்து போட்டு ஆதரவளிக்கின்றனர். அமைச்சர் மகேஷ், தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்து, இரண்டு மொழி மட்டுமே படிக்க வைக்க வேண்டும்.
தமிழக முதல்வர், நீட் தொடர்பாக எழுதிய கடிதம் என்ன ஆனது? உதயநிதி நடத்திய கையெழுத்து வேட்டை, குப்பை தொட்டிக்கு போனதே. தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் வந்து விடக்கூடாது என சதி திட்டம் போட்டு, தினமும் சண்டை போடுவது நாங்களா? மாநில அரசா?
மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு தீர்மானம் இயற்றி உள்ளது. அதை கண்டிக்கிறோம். இதை எதிர்த்து சீதாராமய்யாவுக்கும், சிவக்குமாருக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதவில்லை. தமிழக உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுவார். முல்லை பெரியார், மேகதாதுவையும் விட்டுக் கொடுத்தாகி விட்டது.
எந்த கட்சியோடு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் தலைவர், முதல்வர் யார் என்பதை, பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. எங்களோடு நம்பிக்கையோடு ஒவ்வொரு மாநிலத்திலும் பலர் பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.